Posted in கவிதைகள்

நம் காதல் நித்தியமானது இரவே!

இந்த இரவு என்னுடன் பேச மறுக்கிறது
இரவின் மொழிகளை அறிந்திடும் காதுகள்
என்னிடமிருந்தும் பேச மறுக்கிறது!
இவ்விரவின் ஊடே ஆகாயமும், விண்மீன்களும்,
பூமியும் எதுவுமே பேசவில்லை என்னிடம்!
நான் மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறேன்
என்னிடமே!
பேசுவதைக் கேட்டுக்கொண்டே
இரவு பேச மறுக்கிறது!
ஆழ்ந்து சிந்திக்கிறேன்
அன்பும், அதிசயமும் நிறைந்த
முகங்கள் வந்தாடுகிறது!
இருப்பினும் இரவின் இருளே என் முன் நின்றாடுகிறது
இரவே இப்படியுமா இருப்பாய்,
நீயே என் கவியாய் அமைகிறாய்!
இவ்வுலகில் நீயும் நானும் இருப்பது
நம் காதலின் மகிமையோ?
பின் ஏன் இந்த அமைதி – இரவே
பெருங்கூட்டத்தின் பேரிரைச்சலில் உன் குரல்
என் செவிகளில் விழ தவறவில்லை
ஒலி வந்த திசை நோக்கி ஓடிய தூரம்
நெடியது!
புரியாது போகாதே இரவே!
என்றேனும் ஒரு நாள் உன்னை நான்
சேர்வேன்!
அப்போது உனக்கும் எனக்குமான கூடலில்
உன் நெற்றியில் நான் வைக்கும் முத்தம்
நிலவாகிப் போகும்!
உன் மீது நான் பொழியும் அன்பு
நட்சத்திரங்கள் ஆகிப்போகும்!
நம் காதல் மிகப்பெரிய உண்மை இரவே!
நம் காதல் நித்தியமானது இரவே!

குமரேசன் செல்வராஜ்

Posted in கவிதைகள்

நின்று பார்க்க, ரசிக்க நேரம் கேள்!

கைமணிக் கடிகாரம் அதை மடக்கி எறிந்திடுங்கள்!
கைப்பேசி மணி காட்டும் திரை அதனை அணைத்திடுங்கள்!
இங்கே கவிதைகள் கொட்டிக்கிடக்கிறது
பாடிடவோ, பேசிடவோ,
எழுதிடவோ அல்ல – கவிதை
பார்த்திடவும் இருக்கிறது!
கவிக்கான மிருகங்கள் இரண்டும்
கவிதை கண்டே திளைக்கிறது!
மரமது அசைந்தாடி
மேகத்தை மையாக்கி
செவ்வானத்தில் ஓவியமாக்கிப்
பார்ப் பார் என்று
இப் பாரிலே உன்னைத் தூண்டுகிறதே!
நீ தான் பார்ப்பாயோ
பாராமல் போவாயோ
பணியது போய்
மணியெனத் திரும்பும் வாழ்வில்
நின்று பார்க்க, ரசிக்க நேரம் கேள்!

– குமரேசன் செல்வராஜ்

புகைப்படம் – இந்து தேவா 

Posted in கவிதைகள்

மனம் மௌனிக்கிறது!

தொலை தூரம் சென்றிட
மனம் விரும்புகிறது!

யார் குரலும்,
எந்த இரைச்சலும்
என் செவிகளிலே கேட்டிடாத
ஓர் அமைதியான
இடந்தனில் நின்று
தனிமையை எந்தன்
துணையாய் நானாக
இருந்திட ஒவ்வொரு நாளும்
மனம் மூளையிடம் முறையிட்டுக்
கொண்டிருக்கிறது!

என் இருப்பை யாரும் கோரிடாமல்
என்னை யாரும் தேடிடாமல்
நான் செல்வது எந்நாள்
என்று மூளை மனதிடம்
பதில் கேட்கிறது!

உன் இருப்பை யார்
இங்கே தேடுகிறார்
பிதற்றாமால்
தேதியை கோரு
என்கிறது மனம் கோபமாக!

கோபத்தில் நீ என்
கண்ணையும் மறைக்காதே
தனிமை தேவையே
ஆனால் இருப்பைத் தேடாத
ஆட்கள் குறைவென்று
நீ கூறினாலும்
உன் கண்களில்
தென்படாத ஏதோ ஒரு இடுக்கில்
இவ்விருப்பு அவசியப்படுகிறது
ஆசுவாசமாகு
என்னால் சிந்திக்க முடியவில்லை
என்றது மூளை நிதானமாக!

மனம் மௌனிக்கிறது!

Posted in கவிதைகள்

புத்தாண்டு வாழ்த்துகள்!

உங்கள் எண்ணங்களை
வண்ணமாக்கிடும்
வல்லமையே விழைகிறேன்.

உங்கள் அருகில் ஓர் சிட்டுக்
குருவியாய் அமர்ந்து
உங்களை ஆசுவாச படுத்த
விரும்புகிறேன்.

சட்டென கைகளை ஆட்டி
என்னை விரட்டி விடாதீர்கள்!
விரும்பியே உங்கள் அருகில்
அமர்ந்தாலும் நெருங்கி
வருகின்ற
தைரியம் என்னிடமில்லை.

உங்களின் மனதின் அலைகளின் அசைவுகளே
எனது இருப்பை தீர்மானிக்கிறது!

புத்தாண்டு வாழ்த்துகள்!

                                     – குமரேசன் செல்வராஜ் 

Posted in கவிதைகள்

உனக்கேதும் சொல்லியதா இந்த மழை!

மண் வாசம் நிரம்பி செல்கிறது
காதுமடல்கள் வருடி கடந்த காற்று!
 
கடந்த காற்றின் ஓசையோ
தென்றலின் தெம்மாங்காய் இனிக்கிறது!
 
மலரை நுகரும் பட்டாம்பூச்சி,
உடலை உலுக்கும் காகம்,
மழைக்கு ஒதுங்கிய செம்மறி ஆட்டு மந்தை,
தோகை விரித்தாடும் மயில்,
கொஞ்சி விளையாடும் அணில்,
அதே குளிர்,
அதே காற்று,
நீ தான் இல்லை!
 
இத்தனையும் நேசிக்கிறேன்
நீளம் வெளுத்த வானை
வாசல் பள்ளத்தில் பார்த்து
 
காலுக்கடியில்
மறுகுகிறது மனது
மற்றுமொரு மழைக்காய்
 
வானத்தைப் பிரிந்த மழை சொல்லும்
ஆறுதலாய் மரத்திலிருந்து விழும் தூறலின்
சொத் சொத் என்ற சத்தம்!
 
உனக்கேதும் சொல்லியதா இந்த மழை
அங்கே!
– குமரேசன் செல்வராஜ் 
Posted in கவிதைகள்

மீண்டும் வந்த வசந்தம்!

நீண்ட நாட்கள் பிறகு நெஞ்சம் நிறைந்த

நினைவுகள் கொண்டேன்!

அன்பென்னும் சங்கமம் அங்கே

நான் கண்டேன்!

வாழ்வென்னும் பகுதியின் ஒரு

அங்கமாய் இவர்களைப் பெற்றேன்!

காலங்கள் ஓடினாலும் எங்கள்

காவியங்கள் மீண்டும் அரங்கேறும் என்றுணர்ந்தேன்!

புன்னகையில் பூச்செண்டு கொடுத்து

உபசரிப்பில் உச்சம் தொட்டு

உள்ளம் குளிர உரையாடி

கூடிக் களிக்கையில் உறவாடி

பாசமும் நேசமும் புரண்டோடி

இன்பமெல்லாம் நெஞ்சில் புகுந்தோடி

இனிமையான தருணங்கள் சேர்ந்தோடி

எந்தன் வாழ்வின் இறுதியில் ஞாபங்களாய் அசைபோட காத்துக்கிடக்கிறது!

– குமரேசன் செல்வராஜ் 

Posted in கவிதைகள்

வசந்த கால நாட்கள்!

நினைவலையில் நீங்காத கலைவன்ணங்கள்

இந்த ஏழுநாட்களே!

எங்கெங்கோ சுற்றித்திரியும் பறவைகளின் வசந்தகால வேடந்தாங்கல்

இந்த ஏழுநாட்களே!

யாரென்றே அறியாமல் வந்திணைந்த உறவுகளின் ஊற்றேடுப்பு

இந்த ஏழுநாட்களே!

பிரிய மனமின்றி பிரிந்து கண்களில் கண்ணீர் கொண்டதும்

இந்த ஏழுநாட்களே!

காலங்கள் பூக்க காத்திருந்து, கானங்கள் பாடுவதும்

இந்த ஏழுநாட்களே!

மனமதில் நீங்காத உறவுகள் கொள்வதும்

இந்த ஏழுநாட்களே!

பக்குவமற்றவராய் வந்து பயின்று பக்குவமாய் திரும்புவதும்

இந்த ஏழுநாட்களே!

கண்ணீர் களஞ்சியம் தூக்கி கவலையுடன் பிரிந்து எதிர்பாத்திருப்பதும்

இந்த ஏழுநாட்களுக்கே!

 – குமரேசன் செல்வராஜ்.

This slideshow requires JavaScript.

Posted in கவிதைகள், காதல்

மறந்தால் அன்றோ நினைப்பதற்கு!

கார் மாலையில் முல்லை கடந்தாய்!

கூதிர் யாமத்தில் குறிஞ்சி கடந்தாய்!

முன்பனி வைகறையில் மருதம் கடந்தாய்!

பின்பனி காலையில் நெய்தல் கடந்தாய்!

இளவேனில், முதுவேனில் நண்பகலில் பாலை கடந்தாய்!

எற்பாடு எனும் பொழுதாவது என்னை நினைத்தாயா

என் மனம் கொண்ட கள்வனே!

இல்லை அப்போதும் ஓய்வெனக் கிடந்தாயா

சொல் கள்வா!

பூமகளே சிறுபொழுதோ, பெரும்போழுதோ

உம்மை நினைப்பதில்லை

நான் – உன்

பூவிழியின் ஒளியே எம் மனம் புகுந்து

இத்திணைகள் கடத்தியது

அதனை

மறந்தால் அன்றோ நினைப்பதற்கு!

– குமரேசன் செல்வராஜ் 

Posted in கட்டுரைகள், கவிதைகள்

எங்கே! எங்கே!

 

நித்தமும் நிறைந்த நிம்மதி எங்கே!

மொத்தமும் மறந்த நித்திரை எங்கே!

எந்தம் வாழ்விலே எம்மதி எங்கே!

வாழ்வே வளமென்றிருக்கின், வளமே வாழ்வாகிடுமோ!

என் தந்தையே!

எந்தம் வாழ்வில் இந்த ஏசி  தென்றல்

எம்மை குத்துவதை உணர்வாயோ!

என் தாயே!

என்தன் நினைவிலே இந்த விசைப்பலகை

விரல்கொண்டு மதி விழுங்குவதைக் கண்டாயோ!

– குமரேசன் செல்வராஜ்

Posted in கவிதைகள், சமூகம்

சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

மாதவம் செய்து பிறந்தோரே
மனமுடையாதே எத்தருவாயிலும்
உடலிலியில் இல்லை உம் பலம்
வெறும் உவமை காட்டி ஏமாற்றிடுவர்
உன் உள்ளத்தில் உண்டு
உம் பலம்!
வலிமையுடையோரே
வல்லமை தருவோர்
நீரே!
திறன்களை மறைத்து திறமை இழக்காதே பெண்ணே!
உயிரினும் இனிது இந்தப் பெண்மை
புரிந்துகொள்!
துணிந்து செல்!
சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

                     -குமரேசன் செல்வராஜ்