Posted in கவிதைகள்

மனம் மௌனிக்கிறது!

தொலை தூரம் சென்றிட
மனம் விரும்புகிறது!

யார் குரலும்,
எந்த இரைச்சலும்
என் செவிகளிலே கேட்டிடாத
ஓர் அமைதியான
இடந்தனில் நின்று
தனிமையை எந்தன்
துணையாய் நானாக
இருந்திட ஒவ்வொரு நாளும்
மனம் மூளையிடம் முறையிட்டுக்
கொண்டிருக்கிறது!

என் இருப்பை யாரும் கோரிடாமல்
என்னை யாரும் தேடிடாமல்
நான் செல்வது எந்நாள்
என்று மூளை மனதிடம்
பதில் கேட்கிறது!

உன் இருப்பை யார்
இங்கே தேடுகிறார்
பிதற்றாமால்
தேதியை கோரு
என்கிறது மனம் கோபமாக!

கோபத்தில் நீ என்
கண்ணையும் மறைக்காதே
தனிமை தேவையே
ஆனால் இருப்பைத் தேடாத
ஆட்கள் குறைவென்று
நீ கூறினாலும்
உன் கண்களில்
தென்படாத ஏதோ ஒரு இடுக்கில்
இவ்விருப்பு அவசியப்படுகிறது
ஆசுவாசமாகு
என்னால் சிந்திக்க முடியவில்லை
என்றது மூளை நிதானமாக!

மனம் மௌனிக்கிறது!

Author:

கண்ணை மட்டும் பார்த்து பேசுவதால் என்னவோ எழுத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே உங்கள் கண்களை பார்த்து பேச இங்கே நான் நானாய் குமரேசன் செல்வராஜ்.

Leave a comment